பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்.. இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.!

2வது ஆண்டாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Update: 2021-04-27 07:33 GMT

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியானது இன்று கோயில் வளாகத்தில், பக்தர்கள் இன்றி நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் வீட்டில் இருந்தவாரு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மதவழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நடைபெறவிருந்த முக்கிய கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், பக்தர்கள் இன்றி நடைபெற்றது.




 


இந்நிலையில், 2வது ஆண்டாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதற்காக மேலூரில் உள்ள அழகர் கோயில் ஆடி வீதியில அமைக்கப்பட்டிருந்த செயற்கையாக வகை ஆறு தயார் செய்யப்பட்டு, அதில் வைகை ஆற்றின் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து காலை 8.30 மணியளவில் பச்சைப்பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.


 



இந்த ஆண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தவாரு தொலைக்காட்சிகளில் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Similar News