திருப்பூர் : மதுரைவீரன் கோயிலில், மகாமுனி சாமி சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக சாமி சிலைகள் உடைப்புச் சம்பவம் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. அதற்கு தக்க உதாரணம் சிறுவாச்சூர் தொடர் சாமி சிலைகள் உடைப்பு சம்பவமே.
இதன் வரிசையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகில், காமநாயக்கன்பாளையத்தில் கடந்த 5ஆம் தேதி இரவன்று, மர்மநபர்களால் கோயில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது.
காமநாயக்கன்பாளையம் காலனி பகுதியில், மதுரைவீரன் பட்டத்தரசி அம்மன் கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலை அன்றாடம் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவுன்று, குடிபோதையில் கோயில் முன்பு நண்பர் கூட்டம் ஒன்று தகராறில் ஈடுபட்டதால், கோயிலின் மகாமுனி சிலை உடைக்கப்பட்டு, கண்காணாத இடத்திற்கு வீசி எறியப்பட்டது.
இதனையடுத்து, அடுத்த நாள் காலை தகவல் அறிந்த பொதுமக்கள், இது குறித்து அப்பகுதி காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். பொதுமக்களின் புகாரின்பேரில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.