தருமபுரி: லாரி டியூப்பில் இறந்தவரின் உடலை வைத்து ஆற்றை கடந்து சுடுகாட்டிற்கு சென்ற அவலம்!

Update: 2022-03-22 14:21 GMT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட நாகர்கூடல் அருகே நாகாவதி அணை பகுதியில் பாலம் இல்லாததால் லாரி டியூப்பில் பாடை கட்டி இறந்தவரின் சடலத்தை வைத்து ஆற்றை கடந்து சென்றுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிகாட்டூரில் நாகாவதி அணியின் நீர்தேக்கம் அமைந்திருக்கிறது. அப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இதனிடையே கழனிகாட்டூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாகாவதி ஆற்றின் மறுகரையில் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக கழனிகாட்டூர் பகுதியில் நாகாவதி அணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரைக்கும் மாவட்ட நிர்வாகம் அமைத்து கொடுத்த பாடில்லை. இதுவரையில் அப்பகுதி மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 


மேலும், அப்பகுதியில் அணையில் நீர் அதிகமாக இருக்கும் சமயத்தில் பள்ளி, கல்லூரி செல்வதற்கும், கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் மிகவும் ஆபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியை சுற்றி செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. அதே போன்று யாராவது இறந்து போனால் அவர்களின் சடலத்தை ஆற்றை கடந்து சுடுகாட்டிற்கு அல்லது தங்களின் நிலங்களில் புதைப்பதற்காக எடுத்து செல்ல வேண்டும்.

இந்நிலையில், ஆத்துகொட்டாய் பகுதியில் சின்னசாமி 85, என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் இறுதிச் சடங்கிற்காக ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகமாக காணப்பட்டது. இதனால் லாரி டியூப்பகளை ஒன்றாக இணைத்து அதன் மேல் பாடையில் இறந்தவரின் உடலை வைத்து மற்றவர்கள் ஆற்றில் நீச்சல் அடித்து சென்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில சமயங்களில் ஆற்றில் அடித்து செல்லவும் வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தற்போதாவது பாலம் அமைத்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Tags:    

Similar News