மதுரை சித்திரை திருவிழாவில் இருவர் உயிரிழப்பு - கோயில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன?
மதுரை சித்திரை திருவிழாவின் போது கட்டுக் கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த விவகாரத்தில், மண்டகப்படிகளுக்கு கள்ளழகர் வராதது காரணம் கிடையாது என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 16ம் தேதி மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு காரணம் மண்டகப்படிகளில் சுவாமி கொண்டு வராததாலேயே நெரிசல் ஏற்பட்டது என்று மண்டகப்படி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், அழகர் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. வைகையில் எழுந்தருள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோயிலை விட்டு சுவாமி புறப்பட்டது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் மற்றும் போதிய அளவிற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மண்டகப்படிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக மண்டகப்படி தாரர்களுக்கும் தகவல் கூறப்பட்டது.
மதுரைக்கு சென்று மீண்டும் அழகர் திரும்பி வரும்போது மண்டகப்படிகளில் இறங்குவார் என்று கூறப்பட்டது. அதன்படி 18ம் தேதி பூப்பல்லக்கில் கள்ளழகர் திரும்பும்போது மண்டகப்படி தாரர்களுக்கு சுவாமி தரிசனம் கொடுத்தது. எனவே மண்டகப்படிகளுக்கு சுவாமி இறங்காததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்பட்டது என்பது உண்மைக்கு மாறான தகவல். இவ்வாறு கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar