சங்க கால நிகழ்வுகளை வடிவங்களாக காட்சிப்படுத்திய விழுப்புரம் அரசு கல்லூரி மாணவிகள்!

Update: 2022-04-27 08:22 GMT

விழுப்புரம் : தமிழர்களின் சங்ககால வாழ்வியல், சமூகவியல் மற்றும் முக்கிய அங்கங்களை அழகாக  வடிவங்களாகவும், ஓவியங்களாகவும் அரசு கல்லூரி மாணவிகள்  காட்சிப்படுத்தி அசத்தியுள்ளனர்.


தமிழக கலாச்சாரம் மற்றும் நாகரிகம் மற்ற எல்லா கலாச்சாரங்களுக்கும் முன்னோடியாகவும், அண்டைய கலாச்சாரங்களுக்கு வேராகவும் இருந்து வருகிறது. தமிழர்களின் பண்டைய கால வரலாறு மற்றும் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்கு, சங்க கால இலக்கியங்கள் பெரிதும் உதவி வருகின்றன. அதில் தமிழர்களின் வாழ்வியல், சமூகவியல், போர்த்திறன், அரசியல், காதல் மற்றும் தத்துவம் என அனைத்து அங்கங்களையும் தனித்தனியாக எடுத்து விவரித்து கூறப்பட்டுள்ளது.


இப்படி விவரிக்கப்படும் விவரங்கள், பண்டையக்கால தமிழ் மொழி  இலக்கியத்துடன்  இருப்பதால் அதனை பொதுமக்கள் அறிந்துகொள்ள சிரமப்பட்டு வருகின்றனர்.


இதனை கருதி, விழுப்புரம் மாவட்டம் சாலாமேட்டில் இயங்கிவரும்  எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகள் 150 பேர் ஒருங்கிணைந்து, சங்ககால வாழ்க்கை முறை, ஐந்தினை காட்சி படுத்துதல், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, குறுந்தொகை, நற்றிணை ஆகியனவும், சங்ககால விளையாட்டுகள், அன்பின் உயர்நிலை, காவிரி பூம்பட்டினத்தின் சிறப்புகள், போர் முறை, உணவு முறை, உள்ளிட்ட நிகழ்வுகளை ஓவியங்களாகவும் வடிவங்களாகவும் அக் கல்லூரி மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினர்.


இவர்களது கல்விக்  கண்காட்சியை, கல்லூரியிலுள்ள ஏனைய துறைகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டுகளித்து பாராட்டி வருகின்றனர்.


எம்.ஜி.ஆர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர்களையும் மாணவிகளையும் தமிழ்  ஆர்வலர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். இதே மாதிரியான பல கல்வி கண்காட்சிகளை மற்ற கல்லூரிகளும் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

News 18

Similar News