ஆதாரம் இல்லையாம்! சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு!
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 2022நவம்பரில் வழக்கு மாற்றப்பட்டு, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் பொன்முடி உள்பட அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா தீர்ப்பளித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் விடுவிக்கிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
உரிய சாட்சியங்கள், முகாந்திரம் இல்லாததாலும் 15 ஆண்டுகளுக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே நேரடியாக ஆஜராவதில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விலக்கு பெற்றனர்.
இதனை அடுத்து கடந்த ஏழு மாதங்களாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் 172 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Input From: Dinamalar