அமைச்சர் பொன்முடி மீது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க அமலாக்கதுறை தயாராகி வருகிறது. இதில் பல பெரிய தலைகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வருவதால் அறிவாலய வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
2006 - 11வரையிலான திமுக ஆட்சியில் பொன்முடி கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார். விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில், மகன் கவுதம சிகாமணி மற்றும் பினாமிகளுக்கு செம்மண் அள்ள அனுமதி அளித்துள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்து விதிகளை மீறி, 2.65 லட்சம் லோடு செம்மண் அள்ளி, அரசுக்கு, 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி வீடு, அலுவலகம், பொறியியல் கல்லுாரி என, ஏழு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
பொன்முடி வீட்டில் இருந்த, கணக்கில் வராத, 81 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக வைத்திருந்த, 41 கோடி ரூபாயை முடக்கினர்.
13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினர்.இருவரிடமும், 20 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, கவுதம சிகாமணிக்கு வெளிநாட்டு பங்குகளை வாங்கி விற்றதில் 100 கோடி ரூபாய் வரை ஹவாலா பணம் கைமாறி உள்ளது தெரிய வந்துள்ளது.
போலி ஆவணங்களை தாக்கல் செய்து இந்த முறைகேட்டை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த வழக்கில் சிக்கிய நபர் வாயிலாக, பொன்முடி, கவுதம சிகாமணி ஆகியோர் மோசடி வேலையில் ஈடுபடுவதை நிரூபித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக, பொன்முடியின் பினாமிகளான சதானந்தம், ராஜமகேந்திரன், கோதகுமார், ஜெயசந்திரன், கோபிநாத் ஆகியோரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கின்றனர். ஐந்து பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளனர்.
Input From: Dinamalar