நெல்லை: பழுதடைந்த குண்டும் குழியுமான சாலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, மருத்துவமனை செல்லும் முன்பே சாலையிலேயே சுகப்பிரசவம் ஆக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், ஒரு நகைச்சுவை காட்சியில், மருத்துவமனை செல்ல தவித்துக்கொண்டிருக்கும் கர்ப்பிணியை, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி ஆட்டோவை விவேக் ஒரு குண்டும் குழியுமான சாலையில் வேகமாக ஓட்டிச்செல்ல அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும். இதன் மூலம் "தமிழகத்தில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளில் வாகனத்தில் சென்றாலே கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் ஏற்பட்டுவிடும்" என்பதை சின்னக் கலைவாணர் கருத்தாக நகைச்சுவை கலந்து தமிழக மக்களுக்கு புரிய வைத்திருப்பார்.
இதேபோல் திருநெல்வேலி டவுன், சந்திப் பிள்ளையார் கோவில் அருகே, ராஜா(37) என்பவரது மனைவி மாரி (30) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
மாரிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்படவே, ராஜா உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தொடர்புகொண்டு ஆம்புலன்சை வரவழைத்துள்ளார்.
ஓட்டுநர் சந்திரசேகர் மற்றும் உதவியாளர் சுந்தர்ராஜனுடன் 108 ஆம்புலன்ஸ், மாரியை அழைக்க வந்தது.
ஆம்புலன்ஸ், மாரி, மாரியின் தாயார் மற்றும் கணவர் ராஜாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டது.
திருநெல்வேலி டவுனுக்கும், அரசு மருத்துவமனைக்கும் செல்ல இடைப்பட்ட சாலைகள், இரண்டு ஆண்டுகளாக குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. அதற்கு காரணம் திருநெல்வேலி மாநகர் பகுதியில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் என இரண்டு ஆண்டுகளாக சாலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இச் சாலையில்தான் மாரியை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் பயணித்துள்ளது.
குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்ஸ் பயணித்த காரணத்தால், மாரிக்கு திடீரென்று பிரசவ வலி அதிகரித்தது, பனிக்குடம் உடைந்த அறிகுறியும் தென்பட்டுவிட்டது.