அரசு 4 மாதங்களாக பணம் தரலயாம்! ஆதி திராவிட மாணவர் விடுதிகள் தவிப்பு!

Update: 2023-08-10 04:55 GMT

தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் மாணவர், மாணவியர் விடுதிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு உணவுக் கட்டணமாக மாதம் 1,000 ரூபாய், கல்லுாரி மாணவர்களுக்கு 1100 ரூபாய், அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

சோப்பு, எண்ணெய், முடிவெட்டுதல் போன்றவற்றுக்காக, பள்ளி மாணவர்களுக்கு மாதம், 100 ரூபாய், கல்லுாரி மாணவர்களுக்கு, 150 ரூபாய் வழங்கப்படுகிறது.

விடுதி மாணவர்களுக்கு சமைப்பதற்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவை, நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து வழங்கப்படுகின்றன. மளிகை பொருட்கள், கூட்டுறவு அங்காடிகளில் வழங்கப்படுகின்றன.

வாரத்தில் 5நாட்கள் முட்டை,4நாட்கள் கொண்டைக் கடலை, உணவுடன் வழங்கப்படுகின்றன. தினசரி சமையலுக்கு தேவையான காய்கறிகள், முட்டை போன்றவற்றை, விடுதி காப்பாளர்கள் தினசரி வெளி மார்க்கெட்டில் வாங்குகின்றனர். சமையல் காஸ் சிலிண்டரையும், விடுதி காப்பாளர்களே வாங்குகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை, உணவு கட்டணத் தொகை, அரசால் வழங்கப்படவில்லை. தற்போது, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பல மாதங்களாக உணவுக் கட்டணம் வராததால், விடுதி காப்பாளர்கள், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அரசு உடனடியாக உணவு கட்டணத் தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில், மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என அவர்கள் கூறினர். 

ஆதி திராவிடர் நலத் துறை அதிகாரிகள் நிதித்துறை மீது குற்றம் சொல்கின்றனர்.  அங்கிருந்து பணம் விடுவிக்கப்படாமல் உள்ளது. விரைவில் நிலுவைத் தொகை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Input From: Dinamalar 

Similar News