வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு மத்திய அரசு புதிய விதிகளை விதித்தது. அதாவது ஒரு தொண்டு நிறுவனம் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பின்பற்றியே நிதிகளை பெறுவது அவசியம். இதற்கு என்று உரிமம் வாங்கி வைத்திருக்க வேண்டும்.
அது போன்ற விதிமுறைகளை பின்பற்றாத தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தடை செய்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு (எப்சிஆர்ஏ) என்ற அனுதியை பெறுவது அவசியம். இதன் மூலம் சமூக, கல்வி, மதபொருளாதார மற்றும் கலாசார நோக்கங்களுக்காக வெளிநாட்டு நன்கொடைகளை பெறலாம். மேலும், அனைத்து தொண்டு நிறுவனங்களும் வருமான வரி சட்டத்தின் கீழ் வருமானத்தை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், சிபிஎஸ்சி அறக்கட்டளையின் கீழ் பீப்பல்ஸ் வாட்ச் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைமையிடமாக மதுரை உள்ளது. இதில் குழந்தைகள், முதியவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவிகளை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 1985ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வெளிநாடுகளில் பணத்தை பெற்று உள்ளூர்களில் பல இடங்களில் காப்பகங்களை நடத்துகிறது. இருந்தபோதிலும் வெளிநாட்டு நிதிகளை பெறுவதற்கான விதிமுறைகளை இந்த நிறுவனம் பெறவில்லை. வெளிநாட்டில் கிடைக்கும் நிதிகளில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளதாக புகார்கள் உள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தினர். அதில் கடந்த 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.