பக்தரின் அருள் வாக்கால் மூடப்பட்ட கோயில் கிணற்றில் 3 கற்சிலைகள் கண்டுபிடிப்பு!

Update: 2022-06-05 05:28 GMT

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் மூடப்பட்டிருந்த கோயில் கிணற்றில் இருந்து 3 கற்சிலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த கிணற்றை மறுபடியும் தோண்டுவதற்கு வருவாய்த்துறை தடை விதித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சந்தைப்பேட்டை பெரிய குளம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த விஜயபுரி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் பொங்கல் திருவிழா நடைபெறும் சமயத்தில் தீர்த்தம் கொண்டுவருவதற்காக பக்தர்கள் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூங்கில்பாளையம் பிரிவு என்ற இடத்தில் அமைந்துள்ள கிணற்றுக்கு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. கிணறு அமைந்துள்ள இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே கோயில் கிணறு பாழடைந்து விட்டதால் பல ஆண்டுகளாக தீர்த்தம் எடுப்பதற்காக அந்த கிணற்றுக்கு பக்தர்கள் யாரும் செல்வதில்லை. நாட்கள் செல்ல, செல்ல அந்த கிணறும் மண்ணைப்போட்டு மூடிவிட்டனர்.

இந்நிலையில், விஜயபுரி அம்மன் கோயிலுக்கு வந்த ஒருவர் அருள் வந்து கோயில் கிணற்றுக்குள் சாமி சிலைகள் உள்ளதாகவும், அதனை தோண்டி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை கேட்டுக்கொண்ட பொதுமக்கள் நேற்று (ஜூன் 3) முன்தினம் மூடப்பட்டிருந்த கிணற்றை மறுபடியும் தோண்டினார்கள். அப்போது குறைந்த அளவில் தோண்டியதுமே அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநிரை வெளியேற்றுவதற்கு யாரோ கிணற்றின் வழியாக மிகப்பெரிய குழாய் பதித்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்படி சுமார் 10 அடிக்கு தோண்டியதும் கிணற்றின் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்டு இருந்த குழல் ஊதும் கண்ணன் கற்சிலை மற்றும் 2 அன்னப்பறவைகளின் கற்சிலையும், 2 பெண் தெய்வங்களுடன் கூடிய ஆண் காவல் தெய்வத்தின் கற்சிலையும் இருப்பது தெரியவந்தது.

இதனை கண்ட பக்தர்கள் உடனடியாக மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மூன்று சிலைகளையும் மேலே கொண்டு வந்தனர். அப்போது கனமழை பெய்தது, இதனால் கிணற்றை தோண்டுவதை நிறுத்திவிட்டு மேலே வந்தனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்த பெருந்துறை தாசில்தார் குமரேசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள், இனிமேல் கிணற்றை தோண்டக்கூடாது. கற்சிலை பழமை வாய்ந்தது என்பதை கண்டறிய தொல்லியல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வுக்கு பின்னர்தான் சிலைகள் பற்றிய தகவல் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர். இதன் பின்னர் அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News