திருப்பூரைப் போன்று 75 இடங்களில் ஜவுளித் தொழில் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டம்!

Update: 2022-06-28 09:41 GMT

நாட்டில் திருப்பூரைப் போன்று 75 இடங்களில் ஜவுளி மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருவதாகக் கூறினார். அடுத்து ஐந்தாண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறையாக மாறும் வலிமை உள்ளது என்றார்.

இந்தியா ஆண்டுக்கு 8 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்தால், 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியா 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் ஜவுளித் துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் மையமாக திருப்பூர் விளங்கி வருவதுடன், தற்போது ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

திருப்பூரின் தொழில் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கடந்த 1985-ம் ஆண்டில் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பு ரூ.15 கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் கணக்கிடப்பட்ட அவர்களது ஏற்றுமதி அளவு ரூ.30 ஆயிரம் கோடி ஆகும். கடந்த 37 ஆண்டுகளில் 2 ஆயிரம் மடங்கு அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். கூட்டு முயற்சி மூலமாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் 23 சதவீத சராசரி வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். உலகில் வேறு எந்த தொழில் நகரமும் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றது கிடையாது.

இருப்பினும் திருப்பூர் தொழில் துறையினர் சார்பில் இங்குள்ள தொழிலாளர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களிலும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் அரசு வேலைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு, அவற்றைத் தேடிக் கொண்டிருக்காமல், திருப்பூரில் உள்ள தொழில் துறையினரைப் போன்று தொழில் முனைவோராக மாற வேண்டும். வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களது திறமைகளை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டுமெனவும் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

Input from: swarajyamag

Similar News