போலி பட்டியலின சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி! ஊராட்சி மன்ற தலைவி பதவி பறிக்கப்படுமா?

Update: 2022-04-18 01:57 GMT

வேலூர் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண், போலியான சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டது உறுதியாகிவிட்டது. 

வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்பவர் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக உள்ளார்.

தோளப்பள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா சுரேஷ் மாற்று சமுகத்தைச் சேர்ந்தவர். தேர்தல் வேட்புமனுவில் போலியான ஆதிதிராவிடர் (SC) சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அளித்தார். 




மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் குழு தொடர் விசாரணை நடத்தியதில் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது.

கல்பனா கரேஷ் இந்து - கவரைநாயுடு சமூகத்தை சார்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனா மீது நடவடிக்கை எடுக்க கோரும் இது தொடர்பான கடிதத்தை மாவட்ட ஆட்சியர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப உள்ளார். இதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். 

விரைவில், கல்பனா சுரேஷிடமிருந்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவிப் பறிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News