ஆயத்த ஆடை உற்பத்தியில் நாட்டில் முதலிடம் வகிக்கும் தமிழகம் - மத்திய அரசின் முயற்சியால் நடந்த மாற்றம்!

Update: 2022-06-27 10:10 GMT

இந்தியாவில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பாதி அளவுக்கு (13,000-ல் 6,500) தமிழ்நாட்டில் இருப்பதுடன், ஆயத்த ஆடை உற்பத்தியில் முதலிடத்திலும், ஜவுளி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

ஜவுளித் தொழில் துறை கொவிட் நெருக்கடியை வாய்ப்பாக மாற்றி, 3 மாத காலத்திற்குள் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. கொவிட் பாதிப்புக்கு பிந்தைய காலத்தில், ஜவுளி ஏற்றுமதி சாதனை அளவாக 44 பில்லியன் டாலரை எட்டியுள்ள நிலையில், 2025-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஜவுளித் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை: எம்எம்எஃப் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ.10,683 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆறு நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.964 கோடி முதலீடும், 12 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பும், ரூ.14,600 கோடி விற்று வரவும், ரூ. 360 கோடி அளவுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடை (PM MITRA) பூங்கா திட்டத்தின் கீழ் 7 பூங்காக்களை உலக தரம் வாய்ந்த கட்டமைப்புடன், ரூ. 4 ஆயிரத்து 45 கோடி மதிப்பீட்டில், 2027 - 2028க்குள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் விருதுநகரில் பிரதமரின் மித்ரா பூங்காவை அமைக்க தமிழக அரசு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஜவுளித் தொழில் பூங்கா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரூ. 740 கோடி செலவில் 8 பூங்காக்களை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்துள்ளது. 4 இடங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டின் கொலப்பலூரில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் SITRA சார்பில் மெடிடெக் உயர் சிறப்பு மையமும், பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் இந்து டெக் உயர் சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் ரூ.8,024 கோடி நிதியுதவி மற்றும் ரூ. 595 கோடி மான்ய உதவியுடன், சுமார் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக, மொத்தம் 1405 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமர்த் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 லட்சம் பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, இதுவரை 1.71 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சு விலை உயர்வு காரணமாக, ஜவுளித்தொழில் சந்தித்து வரும் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், பஞ்சு இறக்குமதி மீதான வரி 30 செப்டம்பர் 2022 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Input From: HinduTamil 

Similar News