12 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமித்து செங்கல் சூளை, கல்குவாரி, பண்ணை வீடு: 4 பேர் மீது வழக்கு!
பந்தலூர் அருகில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. அங்கு அனுமதியின்றி மணல் அள்ளி அதன் மூலம் செங்கல் சூளை அமைத்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகாமையில் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 150 ஏக்கர் நிலம் அரசேரி கிராமத்தில் உள்ளது. இந்த நிலம் தமிழ்நாடு விவசாய கூட்டுறவு சங்கத்திற்கு குத்தகை விடப்பட்டிருந்தது. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சங்கம் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தை சில தனிநபர்கள் ஆக்கிரமித்திருப்பதாக கோயில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி விஜேந்திரன் என்பவர் 1.87 ஏக்கர் நிலத்தில் செங்கல் சூளையும், 3.94 ஏக்கரில் கட்டடம் கட்டி, தேக்கு, தென்னை மரங்களை வைத்து ஆக்கிரமித்துள்ளார். அதே போன்று பாலகுரு என்பவர் 1.28 ஏக்கர், சங்கர் என்பவர் 1.66 ஏக்கர், பாண்டியன் என்பவர் 3.16 ஏக்கரில் செங்கல் சூளையும் அமைத்துள்ளதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar