1100 ஆண்டு பழமையான சமணர் கோவில் அழிவின் பிடியில் - திருப்பூர் அருகே தொடரும் அவலம்!

Update: 2022-06-20 06:27 GMT

புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது.

பண்டைய வட கொங்கு, 20 நாட்டு பிரிவுகளில், வடபரிசார நாட்டில் ஆலத்துார் அமைந்துள்ளது. பண்டைய வணிகர்கள் பயன்படுத்திய கொங்கு பெரு வழியில் அமைந்துள்ளதால், சமணர்கள் இங்கு குடியேறியுள்ளனர்.

1,100 ஆண்டுக்கு முன்பு, வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் என்ற இக்கோவிலை கட்டியுள்ளனர். இன்று அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த, மூன்று வட்டெழுத்து கல்வெட்டுக்கள், 13-மற்றும் 14-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழ் கல்வெட்டுக்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகள் உடைய அமணீசர் கோவில் கருவறை முற்றிலும் சிதிலம் அடைந்துள்ளது. முன் மண்டபமும் பராமரிப்பு இன்றி சிதிலமாகி கற்கட்டுமானங்கள் பெயர்ந்து மொத்தமாக கீழே விழும் நிலையில் உள்ளது.மேலும் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் மீது ஏராளமான பெரிய மரங்கள் வளர்ந்து உள்ளன.இக்கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் வளர்ந்து உள்ளூர் மக்களே கூட உள்ளே செல்ல முடியாத அளவு புதர் மண்டி கிடக்கிறது.

அழிவின் பிடியில் உள்ள இந்த கோவிலை தமிழக அரசு மறுசீரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும் என்று ஆலத்தூர் கிராமத்தில் வாழும் பொதுமக்களும் , சமண சமூகத்தினரும் தொல்லியல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Input From: samayam 

Similar News