பராமரிப்பின்றி இருக்கும் பழங்கால கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - அலட்சியத்தில் அறநிலைத்துறை!
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அச்சரப்பாக்கம்திற்கு அருகிலுள்ள பாபுராயன்பேட்டை என்னும் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ விஜய வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால் உடனடியாக அதனை புனரமைத்து மூன்று கால பூஜைகள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை சத்குரு சமூக வலைதளங்களில் தொடங்கி வைத்த கோவில் அடிமை நிறுத்து என்ற ஹேஸ்டாக்கில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வரதராஜ பெருமாள் கோவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் இதற்கு சொந்தமாக அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும். இந்த நிலங்களை அப்பகுதியைச் தெரிந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து கோவில் நிலங்களை மீட்டு கோவிலை பராமரித்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கோவில் வரலாறு : கிருஷ்ணாஜி பண்டிட் எனும் பக்தர் காஞ்சி வரதராஜப்பெருமாளின் சீரிய பக்தராக இருந்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியை சேர்ந்த திவான் ஆவார். இவரது மகனான பாபுராயன் தந்தையைப் போன்றே பெருமாளிடம் பக்தியுடன் திகழ்ந்துள்ளார். காஞ்சி வரதராஜப் பெருமாள் பிரம்மோற்சவத்தின் போது ஒவ்வொரு நாளின் தரிசனம் காண்பதைத் தவறாத பழக்கமாகக் கொண்டிருத்த இவர் ஒரு நாள் வீட்டில் வழிபாடு முடிந்து வர தாமதமாகவே பெருமாளைத் தரிசனம் செய்ய இயலாமல் போக வருந்தி உண்ணாமல் நீரருந்தாமல் வருத்தத்தில் இருந்துள்ளார்.
மூன்றாம் நாள் பாபுராயனின் கனவில் வந்த வரதராஜப் பெருமாள் தெற்கில் தமக்கு ஒரு திருக்கோயில் அமைக்கும் திருப்பணியை செய்தால், அங்கிருந்து தினமும் தரிசனம் தருவதாக உறுதி கூறினார். மறுநாள் மீண்டும் கனவில் நாளை இங்கு வரும் கருடனைத் தொடர்ந்து பின் செல்ல கோயில் கட்டும் இடத்தைக் காணலாம் எனக் கூற அதன்படி அடையாளம் காணப்பட்டு கட்டப்பட்ட திருத்தலமே பாபுராயன்பேட்டை ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் திருக்கோயில் என்று வரலாறு கூறுகிறது.