விவசாய போராட்டத்தால் 814 கோடி சுங்கவரி வசூல் இழப்பைச் சந்தித்துள்ள NHAI!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசாங்கம் புதிய மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இவர்களது போராட்டத்தால் மார்ச் 16 வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கவரி வசூலில் 814.4 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது என்று திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெரிய இழப்பீட்டைத் தொடர்ந்து, மாநிலங்களில் சுங்கவரி கட்டணத்தை மீட்டெடுக்க, சாலை போக்குவரத்துக்கு மற்றும் MSME அமைச்சர் நிதின்கட்கரி எழுத்துப்பூர்வ கடிதமாக நாடாளுமன்றத்துக்குப் பதிலளித்துள்ளார். "விவசாயிகள் போராட்டத்தால் சுங்கவரி வசூல் இழப்பு பஞ்சாப், ஹரியானா மற்றும் சில ராஜஸ்தான் பிளாஸ்சாக்களில் அதிகமாக ஏற்பட்டுள்ளது," என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதிகமா பஞ்சாபில் 487 கோடி இழப்பும், அதனையடுத்து ஹரியானாவில் 326 கோடி இழப்பும் மற்றும் ராஜஸ்தானில் 1.40 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார். "பிற மாநிலங்களில் விவசாயிகள் எதிர்ப்புகளைத் தெரிவிக்காததால் இழப்புகள் ஏற்படவில்லை," என்பதையும் கட்கரி குறிப்பிட்டார்.
இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய கட்கரி, அரசாங்கத்தின் பெரிய இழப்பினை கருத்தில் கொண்டு, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் சுங்க கட்டண வசூலை மீட்பது குறித்து முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கூறினார். மேலும், "பஞ்சாபில் உள்ள பிளாசாக்கள் மீண்டும் சீராக இயங்குவது குறித்து அவசர நடவடிக்கை எடுக்கப் பஞ்சாப் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது," என்றும் கட்கரி குறிப்பிட்டார். இதுதொடர்பாக ராஜஸ்தான் அரசாங்கத்திடமும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.