தக்காளியை தொடர்ந்து விலையில் எகிறிக் குதித்த பூண்டு- ஒரு கிலோ ரூபாய் 200
தக்காளி, பருப்பு விலையைத் தொடர்ந்து பூண்டு விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.;
தக்காளி விலை உயர்வு விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் உயர தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே மளிகை பொருட்களில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மளிகைப் பொருள்களில் வரும் பூண்டு விலையும் உயர்ந்து இருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பூண்டின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் நாள் ஒன்றுக்கு சென்னைக்கு மட்டும் சுமார் பத்து லாரிகளில் பூண்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு வந்தது. ஆனால் சமீப நாட்களாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும் இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்திருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
பூண்டு கிலோ ரூபாய் 25 என்ற மலிவான விலையில் கிடைத்தது. நல்ல தரமான உயர் ரக பூண்டு ஒரு கிலோ ₹50 க்கு கிடைத்தது. ஆனால் தற்போது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூபாய் 80 முதல் ரூ.180 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும் மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்று சென்னை கோயம்பேடு உணவு தானியம் மொத்த சந்தை வியாபாரி பாண்டியராஜன் தெரிவித்தார்.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு விற்பனைக்கு வரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பூண்டு கிலோ 60 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விளைச்சல் குறைவு காரணமாக பூண்டு வரத்து குறைந்து வருகிறது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பூண்டு ரூபாய் 110 முதல் ரூபாய் 200 வரை விற்பனை செய்ய ப்பட்டது. இது குறித்து பூண்டு மொத்த வியாபாரி ஆனந்த் கூறுகையில் கடந்த சில வாரங்களாகவே பூண்டின் விலை அதிகரித்து வந்தது. நேற்று தரமான பூண்டு கிலோ ரூபாய் 200 க்கு விற்பனை செய்யப்பட்டது .