இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு: 500 மில்லியன் டாலர் வரை ஏற்றுமதி!

தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடிவு.

Update: 2023-01-12 02:41 GMT

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர்களை எட்டும் திறன் பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சந்திப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய தொழில்களுக்கான நிலக்கரி, அலுமினியம் போன்ற கச்சா பொருட்கள் விலைமலிவாக இருப்பதால் நாட்டின் போட்டித் தன்மைக்கு உதவும் என்றும் இந்திய நுகர்வோர்களுக்கு கட்டுப்படியான விலையில் தரமான பொருட்களை தர முடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.


இறுதிப் பயன்பாட்டுக்கான பெரும் பகுதி பொருட்களை இறக்குமதி செய்யும் ஆஸ்திரேலியாவும் இந்த ஒப்பந்தம் மூலம் பயனடையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கான சந்தையில் ஜவுளி, ஆடைகள், மணிக்கற்கள், ஆபரணங்கள், தோல் மற்றும் தோல் அல்லாத காலணிகள், கைவினைப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், பொறியியல் பொருட்கள் போன்றவற்றில் தமிழ்நாடு அதிக பங்கு வகிக்க முடியும் என்று இந்த நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய மத்திய அரசின் தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் எம் பாலாஜி தெரிவித்தார்.


நிதியாண்டு 2021-2022-ல் தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 384 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏற்றுமதி 322 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும் அவர் கூறினார். இதையடுத்து இந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 500 மில்லியன் அமெரிக்க டாலரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் பாலாஜி கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News