இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக உருவெடுக்கும் கதிசக்தி திட்டம்.!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் பலவகை இணைப்புகளுக்காக ரூ. 100 லட்சம் கோடி மதிப்பிலான 'PM கதி சக்தி' தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி அவர்கள் இன்று நாட்டின் உள்கட்டுமான திட்டங்களை வேகமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல்முனை இணைப்பு திட்டமான கதிசக்தி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் போக்குவரத்து வசதிகளையும் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளோம். இந்த அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கப் பல திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செய்திருந்தாலும், இதை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் கதிசக்தி திட்டமாகும்.
பொருளாதாரப் பகுதிகள் இணைப்பு இந்தியா முழுவதும் இருக்கும் பொருளாதாரப் பகுதிகள் அதாவது எலக்ட்ரானிக் பூங்கா, தொழிற் பூங்காக்கள், மீன் பிடி தளங்கள் விவசாய பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும். இப்படி இணைப்பதன் மூலம் வர்த்தகம் மேம்படுவது மட்டும் அல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வரும் கால அளவு, ஏற்றுமதி செய்யப்படும் காலத்தை அதிகளவில் குறைக்க முடியும். இதேபோல் குறைந்த செலவிலும், வேகமாகவும் உற்பத்தி பொருட்களை உரியை திட்டத்தில் கொண்டு சேர்க்க முடியும். இந்த இலக்குகளை அடையப் பல கட்டுமான திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தாலும், பல்வேறு அரசு அமைப்புகள் ஒப்புதல், அனுமதி அளிக்க வேண்டும் என்பதால் அதிகளவில் தாமதமாகிறது.
இந்தப் பிரச்சனையை தீர்க்கவே கப்பல் போக்குவரத்துத் துறையில் இருந்து விமானப் போக்குவரத்து வரையில் அனைத்துத் துறை திட்டங்களையும், தனியார் மற்றும் அரசு அமைப்புகள் ஓரே இடத்தில் சேர்ந்து ஏலம் மூலம் ஒப்புதல் வரையிலான அனைத்து பணிகளை ஓரே இடத்தில் செய்யக் கதிசக்தி என்ற centralised portal உருவாக்கப்பட்டு உள்ளது. ஆகவே இந்த கதிசக்தி திட்டம் மூலம் அடுத்த 25 வருட இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Input & Image courtesy:News18