பெட்ரோல், டீசல் மீது புதிய வரியா? விலை உயருமா? உண்மை என்ன.?

பெட்ரோல், டீசல் விலை உயர இருப்பதாக வதந்தி

Update: 2021-02-01 20:06 GMT

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விவசாய வரி விதிக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு, அவற்றின் விலை அதிகரிக்கப் போகிறது என்ற வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறது. இன்றைய பட்ஜெட் உரையில் பெட்ரோல் மீது ₹2.5 ரூபாயும், டீசல் மீது ₹4 ரூபாயும் விவசாய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இவற்றின் மீதான கலால் வரியைக் குறைத்து விவசாய வரியால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தது பற்றி அறியாமல் பல வதந்திகள் பரவி வருகின்றன.

"விவசாயத் துறையில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளையில், அதனை திறம்பட கையாளவும் பாதுகாக்கவும் வேண்டும். இது விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதை உறுதி செய்யும்." என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதற்கான நிதிஆதாரங்களை ஒதுக்கும் விதமாக சிற்சில பொருட்களின் மீது விவசாய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்க உள்ளதாகக் கூறினார். எனினும் இந்த வரியால் மக்கள் மீது நிதிச்சுமை அதிகரிக்காமல் இருக்க ஆவண செய்துள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

அந்த வகையில் பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ₹2.98 என்பதிலிருந்து ₹1.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.‌ அதே போல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ₹4.83லிருந்து ₹1.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு கலால் வரியும் இரண்டு எரிபொருள்களுக்கும் ₹1 ரூபாய் குறைக்கப்பட்டு பெட்ரோலுக்கு ₹11 மற்றும் டீசலுக்கு ₹8 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே புதிதாக வரி விதிக்கப்பட்டாலும், ஏற்கனவே உள்ள வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையில் புதிய வரியால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதே நிதர்சனம்.

Similar News