ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை போதிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் பொதுமக்கள் சுயமாக பயன்படுத்துவது ஆபத்தானது - மருத்துவர்கள் எச்சரிக்கை!
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையுடன் இந்தியா போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாதிப்புகளின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பிராணவாயு செறிவூட்டிகளின் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுபடி, பிராணவாயுவின் அளவு 94% அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 90 சதவீதத்திற்கும் கீழ் பிராணவாயுவின் அளவு குறைந்தால் மருத்துவ அவசர நிலையாக அது கருதப்படும்.
வளிமண்டல காற்றில் சராசரியாக 78% நைட்ரஜனும், 21% பிராணவாயுவும் இருக்கும். பெயருக்கு ஏற்றவாறு பிராணவாயு செறிவூட்டிகள், சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, நைட்ரஜனை வடிகட்டி, பிராணவாயுவின் செறிவுத் தன்மையை அதிகப்படுத்தும்.
பிராணவாயு சிலிண்டர்களின் பணியை, குழாய்கள் அல்லது பிராணவாயு கவசங்களின் மூலம் பிராணவாயு செறிவூட்டிகள் மேற்கொள்ளும். சிலிண்டர்களில் அவ்வபோது பிராணவாயு நிரப்பப்பட வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் பிராணவாயு செறிவூட்டிகள், 24 மணி நேரமும் அனைத்து நாட்களும் தொடர்ந்து இயங்கும் தன்மை உடையவை.
நிமிடத்திற்கு அதிகபட்சமாக 5 லிட்டர் பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளுக்கும், கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பிராணவாயுவின் தேவை ஏற்படும் நோயாளிகளுக்கும் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றின் காரணமாக மிதமான நிமோனியாவால் பிராணவாயுவின் அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அந்த நோயாளிக்கு பிராணவாயு செறிவூட்டி உதவிகரமாக இருக்கும் என்றும், போதிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதனைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.