கொரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்ட சூழலிலும் மக்கள் பணியாற்றி வரும் பா.ஜ.க அமைச்சர்..!
கொரோனா சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு பணியாற்றிவரும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமது நாடாளுமன்ற தொகுதியான உதம்பூரில் கொவிட் மேலாண்மை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் இன்று ஆய்வு செய்தார்.
டாக்டர் சிங்கின் கொவிட் தொற்று நீங்கிவிட்டது என்று இன்னும் உறுதிப்படுத்தப்படாததால், யாரையும் இன்னும் அவர் நேரடியாக சந்திக்கவில்லை.நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் 6 முக்கிய மாவட்டங்களான உதம்பூர், கத்வா, ரியாசி, ரம்பான், தோடா மற்றும் கிஷ்ட்வார் நிலவரம் குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டங்களின் மூத்த அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள், உள்ளாட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், கொவிட்டுக்கு எதிரான போரில் அனைவரும் ஒற்றுமையுடன் பங்கு கொள்ள வேண்டும் என்றும், மருத்துவ அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் பொது மக்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் ஆகியோரது ஒற்றுமையான பங்களிப்பின் மூலமே பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். மனிதநேயம் மற்றும் நுண்ணிய அணுகுமுறையின் மூலம் சமூக பிரச்சினைகளை களைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உதாரணமாக, ஆயிரம் நோயாளிகள் குணம் ஆகும் போதும், தேவை உள்ள ஒரே ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை என்றால்கூட சமுதாயத்தில் அது பீதியை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
ஆலோசனை தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கில் பல தொலைபேசி உதவி எண்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அவரும் அவரது அலுவலக பணியாளர்களும் மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தனிமை படுத்தப்பட்ட நிலையில் அவர் இருக்கும் போதும், எப்போது வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.