இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்ட சிங்கப்பூர் அரசு: உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுமா?
சிங்கப்பூர் கொரோனா வகை குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சர்ச்சைக் கருத்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் உறவுகளில் விரிசல் ஏற்படலாம் என்னும் அளவிற்கு சென்று விட்டது. ஆனால் முன்கூட்டியே இந்தியா சார்பாக இந்த கருத்து தெரிவிக்கப் படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் செய்தியை வெளியிட்டார்.
ஆனால் அதற்கு முன்னர், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் கொரோனா வைரஸ் குறித்து பொறுப்பற்ற கருத்துக்களைக் கூறியிருந்தாலும், உண்மையை அறியாமல் அவர் பேசிய விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகக் கூறினார்.
டெல்லி முதல்வர் இந்தியாவுக்காக பேசவில்லை என்று இந்திய அரசு பதில் கூறிய நிலையில், சிங்கப்பூர் நிலைப்பாட்டில் தற்பொழுது மாற்றம் ஏற்பட்டுள்ளது. "கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் உறுதியான நட்பு நாடுகளாகவும் என்றும் இருக்கும், பொறுப்பற்ற முறையிலான டெல்லி முதல்வர் கருத்து இந்தியாவுடையது அல்ல என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம்" என சைமன் வோங் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த திங்களன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிங்கப்பூரின் புதிய வகை கொரோனா தொற்று குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்பதால் சிங்கப்பூருக்கான விமான சேவைகளை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனக் கூறியிருந்ததற்கு சிங்கப்பூர் அரசு, இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் காரணமாக, இந்த சர்ச்சையை கிளப்பிய கருத்து தற்போது முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம் என்று சைமன் வோங் கூறினார்.