தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு இது மட்டும் கட்டாயம் நடக்காது - எய்ம்ஸ் ஆய்வு!
இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பை உலகளாவிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வின் முடிவில் தற்பொழுது தெரிய வந்துள்ளது.
நாடெங்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்பொழுது பரவலாக போடப்படுகின்றன. மிகவும் குறைவான இடங்களில் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இவை அனைத்திலும் இரு டோஸ்கள் தடுப்பூசிகளை போதிய இடைவெளியில் அவசியம் போட வேண்டும். அதே வேளையில் ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைவதாகத் தகவல்கள் வந்தன.
இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் மிகவும் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகள், இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் மீதம் உள்ளோர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் அளவு அதிகமாகவும் காய்ச்சலும் இருந்தது. அத்துடன் மற்ற நோயாளிகளைப் போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டாலும் யாருக்கும் மரணம் நிகழவில்லை என்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.