"ஐ.நா அமைதிப்படையில் உள்ள இந்திய வீரர்கள் மீது இதுவரை எந்த புகாரும் கிடையாது" - இந்தியா தூதர் பெருமிதம்!
ஐ.நா பொதுச் சபையில், அமைதிப்படையினரின் நன்னடத்தை மற்றும் அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்க கூட்டத்தில் இந்தியா தூதர் டி.எஸ். திருமூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் " ஐ.நா. அமைதிப்படையினரின் வெற்றி என்பது அவர்களின் துாய்மையான ஒழுக்கச் செயல்களில் அடங்கியுள்ளது.
ஐ.நா அமைதிப்படையில் பாலியல் அத்துமீறல்கள், ஒழுக்கக்கேடான செயல்கள் ஆகியவற்றுக்கு 100 சதவீதம் இடமளிக்கக் கூடாது என்பது இந்தியாவின் முக்கியக் கொள்கை
அதனால் தான் ஐ.நா. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் முன், அவர்களுக்கு ஒழுக்கம், நன்னடத்தை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு பயிற்சிகளை இந்தியா வழங்குகிறது. உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, 20 நாடுகளில் ஐ.நா. அமைதிப்படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், இந்திய வீரர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
இந்திய வீரர்கள் மீது இதுவரை, பாலியல் அத்துமீறல், ஒழுக்கக்கேடான செயல்கள் போன்றவை தொடர்பாக எந்த புகாரும் கிடையாது. இதன் காரணமாக, இதுபோன்ற புகார்களுக்கு ஆளான நாடுகளின் அமைதிப்படையினர் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. ஐ.நா. அமைதிப்படையில் பாலியல் அத்துமீறல், ஒழுக்ககேடான செயல்கள் போன்றவற்றை தடுக்க வலிமையான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்." என்று அவர் பேசினார்.