அயோத்தியில் விமான நிலையத்தின் வடிவமைப்பு ராமர் கோயிலின் எண்ணத்தையும் உணர்வையும் பிரதிபலிக்கும், அதன் மூலம் ஆன்மீக உணர்வைத் தூண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
"உள்ளூர் மக்கள் மற்றும் யாத்ரீகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், முக்கியமான மதத் தலமான அயோத்திக்கு நேரடி இணைப்பை வழங்குவதற்கும், இந்திய விமான நிலைய ஆணையம் சிவில் விமான நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது" என்று அது கூறியது.
6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.242 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரு நேரத்தில் 300 பயணிகளை கையாள முடியும் என இந்திய விமான நிலைய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆண்டுக்கு 6 லட்சம் பயணிகளை இந்த விமான நிலையத்தால் கையாள முடியும் என்றும் அது கூறியுள்ளது.
ராமாயணக் கதையின் முக்கிய நிகழ்வுகளை சித்திரமாக காட்சிப்படுத்தும் அலங்கார நெடுவரிசைகளைக் கொண்ட முனையத்தின் மேற்கூரை, பல்வேறு உயரங்களைக் கொண்ட சிகரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முனையத்தின் கண்ணாடி முகப்பு அயோத்தியின் அரண்மனையில் இருப்பதைப் போன்ற உணர்வை மீண்டும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
அயோத்தியை இந்தியாவின் ஆன்மிக மையமாகவும், சர்வதேச சுற்றுலாத் தளமாகவும் மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தி இருக்கிறார் என தெரிவித்துள்ள இந்திய விமான நிலைய ஆணையம், பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறும் வகையில் இந்த விமான நிலையம் இருக்கும் என தெரிவித்துள்ளது.
Input From: The print