இந்திய வாகன சந்தையில் அதிரி புதிரி மாற்றம்: ஆட்டோமொபைலுக்கு பெயர் போன ஐரோப்பாவையே தூக்கி சாப்பிடப் போறோம்!
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டுக்கு ஃபேம் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக, செயல்படுத்தி வருகிறது.
போக்குவரத்தில் மின்சார தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மின்சாரப் பேருந்துகள், மூன்று சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில், பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
ஃபேம் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் 7,090 மின்சாரப் பேருந்துகள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 நான்கு சக்கர மின்சார வாகனங்கள் கார்கள், 10 லட்சம் இரு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு உதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 25,938 கோடி மதிப்பீட்டில் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.18,100 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை 2021 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இதே போல் மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
Input From: Fame India