துளி குறை இருக்காது - இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் மத்திய அரசு!

Update: 2023-03-30 01:36 GMT

சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அறிவிக்கப்பட்ட 6 சிறுபான்மையினர் சமுதாயங்களின் நலனுக்காக நாடு முழுவதும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களது சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளித்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் மூலம் சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் மற்றும் விளிம்பு நிலை சமூகத்தினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அதிகமுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 2022-23ம் நிதியாண்டில் இதன் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டுக்காக 10ம் வகுப்புக்கு முந்தையை கல்வி உதவித்தொகைத் திட்டம், 10ம் வகுப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் தகுதி அடிப்படையிலான உதவித்தொகைத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினரின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக பிரதமரின் விகாஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறுபான்மையனரின் மேம்பாட்டுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 25 முதல் 35 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்குகிறது. உலகில் ஹஜ் புனித பயணத்திற்கு அதிக யாத்திரிகர்களை அனுப்பும் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மார்ச்-21 ம் தேதி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறப்படும் விமான நிலையங்களில் சுகாதாரப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் முதல் வாரத்தில் சவுதி அரேபியாவுக்கு மருத்துவக்குழுவை அனுப்பவும் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழு அங்கு மெக்கா, மதீனா, ஜெட்டா, அரஃபாத் ஆகிய இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக மருந்தகங்களை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

Similar News