பிரதமர் மோடியின் பார்முலாவை கேட்கும் இலங்கை - சரிந்த பொருளாதாரத்தை மீட்டு இந்தியாவிடம் கேட்ட கைமாறு!
இலங்கை அரசின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்குப் 2 நாள் பயணம் மேற்கொண்ட தேசிய நல்லாட்சி மையத்தின் (NCGG) இயக்குநர் பாரத் லால் தலைமையிலான இந்தியக் குழுவினர், 2023-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது கொள்கை சீர்திருத்தங்கள், நல்லாட்சி, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, உறுதியான பொது சேவை வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா சமூக-பொருளாதார வளர்ச்சியை நிர்வகித்த விதம் மற்றும் உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்த விதத்தை ரணில் விக்கிரமசிங்கே பாராட்டினார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையில் ஆட்சி மற்றும் பொதுக் கொள்கைக்கான பல்கலைக்கழகத்தை நிறுவ தேசிய நல்லாட்சி மையம் உதவ வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடும் பொருளாதார நெருக்கடிக்கிடையே குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்று அதன் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது போல், 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமாரகப் பதவியேற்ற பின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் நல்ல நிர்வாகத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியதாக தேசிய நல்லாட்சி மைய இயக்குநர் பாரத் லால் சுட்டிக் காட்டினார்.
பிரதமரின் 'வசுதைவ குடும்பகம்' கொள்கையைப் பின்பற்றி தேசிய நல்லாட்சி மையம் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் அரசு ஊழியர்களிடையே ஒத்துழைப்பையும், கற்றலையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கையில் வேகமான சமூக - பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய, இந்தியாவின் டிஜிட்டல் ஆளுகை மற்றும் பங்கேற்பு கொள்கை வகுப்பில் உள்ள அனுபவத்தின் அடிப்படையில் NCGG இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இந்தியாவின் கொள்கை சார்ந்த ஆட்சியையும், திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டையும் கற்றுக்கொள்வதில் இலங்கை ஆர்வமாக உள்ளது.