குஜராத் மண்ணில் தமிழ் சொந்தங்களை சந்திப்பது பெருமகிழ்ச்சி - தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி!
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
தாம் முதலமைச்சராக இருந்த போது 2010-ம் ஆண்டு மதுரையில் இதுபோன்ற சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், அதில் சௌராஷ்டிராவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து விருந்தினர்கள் அதே பாசத்துடன் சௌராஷ்டிரா வந்துள்ளதாக அவர் கூறினார். இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முக்கிய கலாச்சார நிகழ்வுகளை நாம் கொண்டாடி வருகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இது தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிராவின் சங்கமமாக மட்டுமல்லாமல், தேவி மீனாட்சி, தேவி பார்வதி உருவில் சக்தியை வழிபடும் திருவிழாவாகவும் உள்ளது என்று கூறினார்.
அத்துடன், கடவுள் சோம்நாத், கடவுள் ராம்நாத் ஆகிய வடிவில் சிவனை கொண்டாடும் விழாவாகவும் இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேசமே முதலில் எனும் சர்தார் பட்டேல், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் சிந்தனையை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் அடையாளப்படுத்துவதாக அவர் கூறினார். நாட்டை கட்டமைப்பதில் இந்த பாரம்பரியத்தையொட்டி நாம் முன்னோக்கி செல்லவேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குறித்த நூலையும் வெளியிட்டார். சௌராஷ்டிரக் கலைஞர்கள் தமிழ் திரைப்பட பாடகர் டி.எம். சௌந்தரராஜனின் சில பாடல்களைப் பாடினர்.