கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா இதுவரை படைக்காத சாதனை!

Update: 2023-06-15 05:32 GMT

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2022-23-ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டை விட, எண்ணிக்கை அளவில் 26.73 சதவீதமும், பணமதிப்பில் 4.31 சதவீதமும் அதிகரித்துள்ளது.

பல்வேறு சவால்களுக்கிடையே இந்தியா 2022-23-ம் நிதியாண்டில் ரூ.63,969.14 கோடி மதிப்பில் 17,35,286 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்துள்ளது. இதில் பெருமளவு அமெரிக்கா போன்ற பெரும் சந்தை நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

2021-22ம் நிதியாண்டில் ரூ.57,586.48 கோடி மதிப்பில் 13,69,264 மெட்ரிக் டன் அளவுக்கு கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து கடல் உணவுகளை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து சீனா, ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள் இறக்குமதி செய்கின்றன.

கடல் உணவுகள் ஏற்றுமதியில், உறைய வைக்கப்பட்ட இறால் முதலிடம் வகிக்கிறது. 2022-23ம் நிதியாண்டில் 7,11,099 மெட்ரிக் டன் அளவிற்கு இவை ஏற்றுமதி செய்யப்பட்டன. அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு 2,75,662 மெட்ரிக் டன் அளவுக்கு உறைய வைக்கப்பட்ட இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Input From: ANI

Similar News