இனி இந்தியா ஆறுகளிலும் போக்குவரத்து தொடங்கும் - அக்ஷர் குரூஸ் கப்பல் சபர்மதி ஆற்றில் பறந்தது!
அகமதாபாத் மாநகராட்சி மற்றும் சபர்மதி நதி மேம்பாட்டுக் கழகத்தால் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அக்ஷர் நதி சுற்றுலாப் படகை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, அக்ஷர் நதிப்படகு மூலம், குஜராத் அரசும், மாநகராட்சியும் இணைந்து அகமதாபாத் நகர மக்களுக்கு இன்று ஒரு புதிய பரிசை வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது தான் முதன்முறையாக இந்தியாவில் நதிக்கரையை கற்பனை செய்து திட்டமிட்டார்.
அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். இந்த நதிக்கரை அகமதாபாத்தில் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றுலாவின் ஈர்ப்பு மையமாக உருவெடுத்து, பிரபலமாக உள்ளதாக அவர் கூறினார்.
நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல், மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையமாகவும் இது உருவெடுத்துள்ளது. இந்த ஆடம்பர நதிப் படகு அகமதாபாத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரு புதிய ஈர்ப்பாக இருக்கும் என்றார்.
அகமதாபாத் மாநகராட்சி, சபர்மதி ரிவர்ஃபிரண்ட் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் பொதுத் துறை- தனியார் பங்களிப்பின் கீழ் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ15 கோடி செலவில் இரட்டை என்ஜின்களுடன் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பயணிகள் சொகுசு படகு இது ஆகும். இதில் ஒன்றரை மணி நேரம் பாதுகாப்பாக பயணிக்க முடியும். இந்தப் படகு 165 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. மக்களை நிச்சயம் கவரும் உணவகமும் உள்ளது என்று அமித் ஷா கூறினார்.