முதியோர் கண்ணியமான வாழ்க்கை வாழ உதவும் மோடி அரசு.. அட எப்படின்னு தெரியுமா?
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்காக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மூத்த குடிமக்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை இந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அறிமுகப் படுத்தப்பட்ட அடல் வயோ அபியுதய் யோஜனா என்ற திட்டம் இந்தியாவில் மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான முன்முயற்சியாகும்.
மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அடல் வயோ அபியுதய் யோஜனா என்ற மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்களை நடத்துவதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
தற்போது இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 552 மூத்த குடிமக்கள் இல்லங்கள், 14 தொடர் பராமரிப்பு இல்லங்கள், 19 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் 5 பிசியோதெரபி கிளினிக்குகள் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.5 லட்சம் பயனாளிகள் இந்த முதியோர் இல்லங்களில் தங்கியுள்ளனர். நாடு முழுவதும் 361 மாவட்டங்களில் இவை உள்ளன. கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.288.08 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகைகளில் பயன் அடைந்த மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 3,63,570 ஆகும்.
Input & Image courtesy: News