ராமர் வனவாசம் சென்ற வழியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க முடிவு: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!
ராமாயண மகாகாவியத்தில் கூறப்பட்டுள்ள கூற்றின்படி, ராமபிரான் தனது 14 ஆண்டுகால வனவாசத்திற்காக அயோத்தியிலிருந்து சித்திரகூட் எனும் பகுதிக்குச் சென்ற புராண வழியைப் பின்பற்றி, அதில் நவீன நெடுஞ்சாலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
210 கி.மீ நீளமுள்ள இந்த புதிய நெடுஞ்சாலை ராம் வன் காமன் மார்க் எனும் பெயரில் அழைக்கப்படும். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இது தொடர்பான ஒரு ஆவணத்தைப் பகிர்ந்துள்ளது. ராம் வன் காமன் மார்க் என்பது சீதா மற்றும் லட்சுமணனுடன் 14 ஆண்டு வனவாசத்திற்கு ராமர் எடுத்த பாதையை மீண்டும் கட்டமைக்க முற்படும் ஒரு திட்டம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உத்தேச பிரதேசத்தில் பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ஷ்ரிங்வர்பூர், மஞ்சன்பூர் மற்றும் ராஜபூர் வழியாக அயோத்தியை சித்ரகூட்டுடன் இணைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 121 கி.மீ. நீள ராம் வன் காமன் மார்க் விரிவாக்கத்திற்கான திட்ட அறிக்கைகள் 4,080 கி.மீ திட்டங்களின் ஒரு பகுதியாக 35,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்பு தெரிவித்திருந்தார். இதில் புகழ்பெற்ற சாரதா சக்தி பீடமும் அடங்கும். மேலும் 137.45 கோடி செலவில் இவை சுற்றுலா தலங்களாக உருவாக்கப்படும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது.
சித்திரகூட் பகுதி அமைந்துள்ள மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஆண்டு, தனது மாநிலத்தில் ராம் வன் காமன் பாதையை அபிவிருத்தி செய்வதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் உதவி மற்றும் வழிகாட்டுதலை நாடியிருந்தார்.
இதே போல் ராம் வன் காமன் பாதையை விரிவாக்கி ராமர் சென்ற இடங்கள் அமைந்துள்ள சத்தீஸ்கர் பகுதிகளையும் இந்த திட்டத்தில் இணைக்க, மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் மாநிலத்தில் தனது அரசாங்கத்தின் லட்சியமான ராம் வன் காமன் சுற்றுலா திட்டத்தின் வளர்ச்சிக்கு மக்கள் பங்களிக்க ஒரு பிரத்யேக நிதி திட்டம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.