உலகம் முழுவதும் தற்போது உள்ள நோய் தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது. இந்தியாவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். அந்த வகையில் தற்போது கொரோனாவை தடுத்து நிறுத்த மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 12 கோடி தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்காரணமாகத்தான் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் முழு வீச்சுடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தைத் முழு வீச்சாக முழுமையாகத் தொடர்வதற்கு பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை தடையாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி கிடைப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை கூறியிருப்பது என்னவென்றால், மே மாதத்தில் தடுப்பூசி திட்டத்துக்கு 7.94 கோடி தடுப்பூசிகள் கிடைத்தன. இதில் 4.03 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசால் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டன.
மேலும் 3.90 கோடி நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழ் வினியோகிக்கப்பட்டன. ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும். இதில் 6.09 கோடி தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு செலுத்த முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும். தடுப்பூசிகள் வீணாகுவதை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநிலங்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.