தமிழகத்தில் ஒரு மெகா உணவுப் பூங்கா, 16 குளிர்பதன கிடங்கு வசதி: உணவுத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மத்திய அரசு!
உணவுப் பதப்படுத்துதல் துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ரூ.10,900 கோடி ஒதுக்கீட்டில் சர்வதேச சந்தைகளில் இந்திய வணிக முத்திரையுடன் கூடிய உணவுப் பொருட்கள் இடம் பெறுவதற்கு ஏற்ப உலக அளவிலான உணவு நிறுவனங்களின் ஆதரவை உருவாக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உணவுப் பதப்படுத்துதல் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும். சிறுதானிய உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், கடல் சார் பொருட்கள், பாலாடைக் கட்டி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் 4 பெரிய பிரிவுகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படும். 2-வது பிரிவாக முட்டைகள், கோழியிறைச்சி, முட்டைப் பொருட்கள் ஆகியவற்றைப் பதப்படுத்தும் 4 பிரிவுகளும் செயல்படும்.
நாகாலாந்திலிருந்து ஒரு நிறுவனம், அசாமிலிருந்து இரண்டு நிறுவனங்களும், இந்தத் தொழிலுக்காக விண்ணப்பித்ததில் அவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒரு மெகா உணவுப் பூங்கா, 16 ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி, 11 வேளாண் பதனத் தொகுப்பு, 32 வேளாண் உணவுப்பதன அலகுகள், 9 வேளாண் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்புகள், 2 காய்கறி விற்பனை சந்தைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒரு ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் கிசான் சம்பதா துணைத் திட்டத்தின் கீழ், 2022-23ம் நிதியாண்டில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ரூ.15.20 கோடியும், வேளாண் பொருட்கள் பதனத்தொகுப்புக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்க ரூ.36.59 கோடியும், உணவுப்பதன மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்கவும், விரிவுபடுத்தவும் ரூ.103.35 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
Input From: Odisha diary