ஆகாஷ் ஏவுகணைகளை தயாரிக்க ₹499 கோடியில் ஒப்பந்தம் - பாரத் டைனமிக்ஸ் நிறுவனம்!
கடந்த 2018-ஆம் ஆண்டு பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் ₹14,000 கோடி ரூபாய்க்கு ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இவ்வாறு இருக்கையில் தற்போது இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டம் (IGMDP) மூலமாக இந்திய விமானப்படைக்கு ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், வானிலிருந்து தரை இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்து இந்திய ராணுவ விமானப்படைக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், இந்திய விமானப்படைக்கு ₹499 கோடி மதிப்பீட்டில் ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள ஆகாஷ் ஏவுகணை 720 கிலோ எடை கொண்டதாகும். மேலும் இது 60 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை சுமந்து கொண்டு 30 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.