"நாட்டில் பெட்ரோலின் தேவை காணாமல் போகும், அடுத்த 5 ஆண்டுகளில் பசுமை எரிபொருள் தான்"- நிதின் கட்கரி உறுதி!
"பசுமை எரிபொருள்களால் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை நாட்டில் இல்லாமல் போகும்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியாகக் கூறியுள்ளார்.
நாட்டில் பசுமை எரிபொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய மத்திய மோடி அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. எரிபொருளுக்காக பிற நாட்டவரிடம் கையேந்தி நிற்பதை தவிர்த்து, நாட்டிலேயே பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற இலக்குடன் மத்திய அரசு முனைப்பாக பயணித்து வருகிறது.
அதன் விளைவாக நாட்டில் தற்போது பசுமை எரிபொருள்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் உறுதியாக கூறுகிறேன், அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலின் தேவை இந்த நாட்டில் இல்லாமல் போகும். உங்கள் கார்கள், மற்றும் ஸ்கூட்டர்கள் பசுமை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் இயற்கை கேஸ்கள் மூலம் இயக்கப்படும்." என்று உறுதியாகக் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலைகளின் உயர்வால் அவதிப்படும் சாமானிய மக்கள், மத்திய அமைச்சரின் இந்த உறுதிமிக்க பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.