உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டி சாதனை!

Update: 2023-05-25 03:33 GMT

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவாக 503.92 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85% அதிகமாகும். முந்தைய ஆணடில் 352.75 லட்சம் பயணிகள் பயணித்தனர்.

மேலும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18% அளவிற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை சேவை அதிகரித்துள்ளது.

2023 ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47% அளவிற்கு மட்டுமே ரத்து செய்யப்பட்டது. அத்துடன் பயணிகளின் புகார் எண்ணிக்கை 10,000 பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவிற்கு குறைவாக இருந்தது.

விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்திய கூறியபோது, விமானப் போக்குவரத்துத்துறையின் வளர்ச்சிக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், நம் நாட்டின் பொருளாதாரம் மட்டும் வலுவடையாமல் நாடுமுழுவதும் மக்களை இணைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Input From: DDnews

Similar News