அணுமின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதியை மேம்படுத்த மட்டுமே ரூ. 663 கோடி - குறைவில்லாமல் அசத்தும் மத்திய அரசு!
கூடங்குளம் பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான சிறப்பு சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டம் ரூ. 500 கோடியில் அமலாக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ. 200 கோடி மற்றும் வீடுகள் கட்ட ரூ. 300 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்திய அணுசக்தி கழகம் இதுவரை அதன் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்காக சுமார் ரூ. 663 கோடி செலவிட்டுள்ளது என்றும் இதில் சுமார் 70% , அணு மின் நிலையங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகா வாட் திறனுடைய ஒன்றாவது மற்றும் இரண்டாவது அலகுகளில் உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். தற்போதைய பணிகள் நிறைவடையும் போது, 2027-ஆம் ஆண்டுக்குள் 6000 மெகா வாட் முழு உற்பத்தி திறனை கூடங்குளம் அணுமின் நிலையம் அடையும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், அணுமின் நிலையங்கள் இணையத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன; மேலும் நிர்வாக வலைப்பின்னலிலிருந்து அணுக முடியாது. அணு மின் நிலையங்களில் உள்ள நிர்வாக நெட்வொர்க்குகளின் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Input From: PIB