இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 7408 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு!
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு 2022-23 நிதியாண்டின் (ஏப்ரல்-ஜூன்) முதல் மூன்று மாதங்களில், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 31 சதவீதம் உயர்ந்துள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் 2022 இல் 7408 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் இது 5663 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல்-ஜூன் 2022-23க்கான ஏற்றுமதி இலக்கு 5890 மில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எடுத்த முயற்சிகள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த ஏற்றுமதி இலக்கில் 31 சதவீதத்தை எட்டுவதற்கு உதவியுள்ளன.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி நான்கு சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அதே சமயம் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் தொடர்புடைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 59.71 சதவீதம் என்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
மேலும், தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 37.66 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஏப்ரல்-ஜூன், 2021 இல், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் 394 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, இது நடப்பு நிதியாண்டின் தொடர்புடைய மாதங்களில் 409 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பாசுமதி அரிசி ஏற்றுமதி 25.54 சதவீத வளர்ச்சியைக் கண்டது, அதன் ஏற்றுமதி 922 மில்லியன் டாலர் (ஏப்ரல்-ஜூன் 2021) இலிருந்து 1157 மில்லியன் டாலர் (ஏப்ரல்-ஜூன் 2022) ஆக அதிகரித்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பாசுமதி அரிசி ஏற்றுமதி 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 1566 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் இது 1491 மில்லியன் டாலர்களாக இருந்தது.