மாறிவரும் நவீன யுகத்திற்கான மகத்தான முன்னெடுப்பை கையிலெடுத்த மத்திய அரசு - IC தயாரிக்கும் நாடாகும் இந்தியா!

Update: 2021-04-03 06:14 GMT

மகத்தான ஒரு முன்னெடுப்பை, மாறிவரும் நவீன யுகத்திற்கான ஒரு திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் வெங்கட்ரமணன், கம்ப்யூட்டர்கள், லேப்டாப், ஸ்மார்ட்போன்கள், வாஷிங் மெஷின்கள் என அனைத்து விதமான எலக்ட்ரானிக் சாதனங்களிலும் ஐ.சி.க்கள் (Integrated Chips) என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படும் செமி கண்டக்டர் கருவிகள் தான் பிரதானம். மனிதனுக்கு இதயம் போல, மூளை போல இவற்றிற்கான வர்த்தக தேவைகள் (demand) எப்படி இருக்கும் என்பது கற்பனையைத் தாண்டியது.

துரதிர்ஷ்டவசமாக இதனை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் ஒரு, ஒரேயொரு தொழிற்சாலை கூட இந்தியாவில் இல்லை. மிகச்சிறந்த மனித வளங்கள், தங்கு தடையற்ற மின்சாரம், மிகவும் தூய்மையான சிலிகா என பலப்பல முக்கிய விஷயங்கள் தேவைப்படும். இவ்வளவு பெரிய அளவில் உலகம் முழுமைக்கான தேவைகளை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தான் நிறைவேற்றுகின்றன. சிறிய நாடான தைவான் இதில் சக்கைப்போடு போடுகின்றது.

இதுதான் இதுவரையிலான நிலை. இதனை மாற்ற முடிவெடுத்துள்ளது மோடி அரசு. இந்தியாவில் தங்களது தொழிற்சாலைளை திறக்க வருமாறு இந்த ஜாம்பவான் கம்பெனிகளை அழைத்துள்ளது. ஒரு Chip தயாரிக்கும் கம்பெனியை நிறுவ வேண்டும் என்றால் பலப்பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படும். பகாசுரத்தனமாக முதலீடுகள் தேவைப்படும் தொழில் அது. ஆதலால் இந்திய அரசு ஒரு அட்டகாசமான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு வாருங்கள், எங்கள் நாட்டில் உங்களது சிப் (Chip)தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுங்கள், எங்கள் அரசிற்கு தேவைப்படும் ICக்கள் அனைத்தையும் உங்களிடமே வாங்கிக் கொள்கிறோம், மேலும் உங்களுக்கு 1 பில்லியன் டாலர்களுக்கும் (சுமார் 7300 கோடிகள்) மேலாக நாங்கள் பண ஊக்கத்தொகைகளை அளிக்கிறோம் என்று கூறியுள்ளது இந்திய அரசு. 


ஒரு பில்லியன் டாலர்கள் என்பது மிகப்பெரிய தொகை. அதுவும் அவர்கள் திறக்கும் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் ஒரு பில்லியன் டாலர்கள் என்பதாக அறிவிப்பு. நிச்சயமாக இது முக்கிய IC தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஈர்க்கும்.

இதனால் நமக்கு என்ன பயன்? படித்த, திறமையான பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியான வேலை கிடைக்கும். சார்ந்த தொழில்கள் அனைத்தும் பெருகி வளரும். அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். பலப்பல சிறு, குறு தொழில்கள் நன்கு வளரும். வளர்ச்சி என்பது அனைத்து மட்டங்களிலும் நடக்கும்" என்று கூறியுள்ளார்.

Similar News