மூலப்பொருள் ஏற்றுமதி தடையை நீக்க, அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்த SII CEO!
இந்தியாவில் மட்டுமல்ல பல உலக நாடுகளையும் கொரோனா மிகவும் கடுமையான முறையில் பாதித்துள்ளது. இதற்கு உடனடி தீர்வு என்னவென்றால், தடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்வதுதான். தற்போது அமெரிக்காவிற்கு வெளியே உள்ள தடுப்பூசித் தொழிலுக்கான மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், ஏற்றுமதிக்கான தடையை நீக்குமாறு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா அமெரிக்க அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.
"மரியாதைக்குரிய அமெரிக்க அதிபர் அவர்களே, இந்த வைரஸை வெல்வதில் நாம் உண்மையிலேயே ஒன்றிணைய வேண்டுமானால், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள தடுப்பூசித் தொழில் சார்பாக, அமெரிக்காவிலிருந்து மூலப்பொருள் ஏற்றுமதியின் தடையை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதனால் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும். உங்கள் நிர்வாகத்திடம் இது குறித்த விவரங்கள் உள்ளது" என்று பூனாவாலா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாக புனேவை தளமாகக் கொண்ட SII நிறுவனம் பிரிட்டனின் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடமிருந்து லீகல் நோட்டீஸ் பெற்றுள்ள நிலையில், பூனவல்லா அமெரிக்க அதிபருக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலைகளை இந்தியா முழுவதுமாக எதிர்த்துப் போராடுகையில் பூனவல்லாவின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூனவல்லாவின் SII தற்போது இந்தியாவில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு வழங்கி வருகிறது.