ரூ.150 கோடி தங்க நகை மோசடி! - முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ கமருதீன் கைது!

Update: 2021-03-29 01:14 GMT

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கமருதீன். கமாருதீன் சேர்மனாக இருக்கும் ஃபேஷன் ஜுவல்லரி நிறுவனத்தில் தங்க நகைகளுக்கான முதலீடுத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

அதில் சுமார் 800 பேரிடமிருந்து 150 கோடி ரூபாய்வரை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் வாங்கியவர்களுக்கு நகைகள் வழங்கப்படவில்லை.

நகையோ அல்லது செலுத்திய பணமோ கிடைக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிந்ததை அடுத்து பணத்தை முதலீடு செய்தவர்கள், கமருதீன் நகை மோசடி செய்திருப்பதாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் ஜுவல்லரி கோல்டு முதலீட்டுக்காகப் பணம் வாங்கி, மோசடி செய்யப்பட்டதாக இதுவரை 117 புகார்கள் வந்திருப்பதாகவும். அவற்றில் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் கமருதீன் 13 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கமருதீன் மீது இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

என்னைக் கைதுசெய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு கூறியதால்தான் விசாரணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று பேட்டியளித்துள்ளார்  கமருதீன்!

Similar News