2014க்கு பிறகு வடகிழக்கில் கப்சிப்: எந்த பிரதமரும் செய்யாத ஒன்றை நடத்திக்காட்டிய மோடி!
பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு எடுத்துள்ள பயனுள்ள நடவடிக்கைகளால், வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-ம் ஆண்டில் தீவிரவாதச் சம்பவங்கள் 76% குறைந்துள்ளது. அதே போன்று பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் இறப்புகள் முறையே 90% மற்றும் 97% குறைந்துள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2022 முதல் மத்திய அரசு, நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் பதற்றம் மிகுந்த பகுதிகளைக் குறைத்தது. தற்போது மீண்டும் 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல், இந்த மூன்று மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் உள்ள பதற்றம் மிகுந்த பகுதிகள் மேலும் குறைக்கப்படவுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு தீவிரவாதக் குழுக்கள் வன்முறையைக் கைவிட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 7,000 கிளர்ச்சியாளர்கள் சரணடைந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில், அமைதியான, வளமான மற்றும் வளர்ந்த வடகிழக்கு மாநிலங்கள் என்ற பிரதமர் மோடியின் கனவை நனவாக்க, உள்துறை அமைச்சகம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் திரிபுராவில் NLFT (SD) உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 2019-ம் ஆண்டு ஜனவரியில் போடப்பட்ட போடோ ஒப்பந்தம், அசாமின் 50 ஆண்டுகளாக இருந்த போடோ பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது.
2020-ம் ஆண்டு ஜனவரியில் பல ஆண்டுகளாக இருந்த புரு-ரியாங் அகதிகள் நெருக்கடியைத் தீர்க்க ஒப்பந்தம் கையெழுத்தானது. 2021-ம் ஆண்டு செப்டம்பரில், கர்பி-ஆங்லாங் ஒப்பந்தம், அசாமின் கர்பி பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சையைத் தீர்த்தது. 2022-ம் ஆண்டு செப்டம்பரில், அசாம் பழங்குடியினருடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநில மக்களின் வாழ்வில் இந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்ததற்காகவும், இப்பகுதியை மற்ற மக்களின் இதயங்களுடன் இணைத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
Input From: PTI