24 கோடி கொரோனா பரிசோதனைகளை கடந்த இந்தியா - 6 கோடி தடுப்பூசி போடப்பட்டு பதிவான உலகச்சாதனை!
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது. மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், மற்றும் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 35,726 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், செயலாளர்கள், அதிக பாதிப்பு உள்ள 46 மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய உயர் நிலை குழுவினரிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
புதிய கொரோனா அலையை கட்டுப்படுத்த அவர் 5 அடுக்கு ஆலோசனையை வழங்கினார். மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 24 கோடியை கடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில், 68,020 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.5 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இன்று காலை 7 மணி வரை, 6.05 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 72வது நாளான நேற்று, மொத்தம் 2,60,653 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,55,993-து எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 291 பேர், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.