5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கிய மகாராஷ்டிரா அரசு.!
மத்திய அரசின் முந்தைய ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவுக்கு அதிகமான டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா அரசு 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதில் ஒரு புறம் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது போன்று மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த கொரோனா தடுப்பு மருந்துகளை மகாராஷ்டிரா மாநிலம் வீணடித்துள்ளதாக மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டிலேயே அதிகமான கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு இதுவரை 31 லட்சத்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களுடைய மாநிலத்தில் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை உள்ளது என்று மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் குற்றம் சாட்டியிருந்தார். தங்களிடம் தற்போது 14 லட்சம் டோஸ்கள் மட்டுமே உள்ளதாகவும், இது 3 நாட்களுக்கு மட்டும்தான் பயன்படுத்தும் அளவிற்கு உள்ளது என கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், 'மத்திய அரசின் முந்தைய ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவுக்கு அதிகமான டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
அங்கு தற்போதுவரை 23 லட்சம் டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. இந்த மருந்து ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும். மாவட்டம் மற்றும், கிராமங்களுக்கும் வினியோகிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கடமை ஆகும். சரியான வகையில் திட்டமிடுதல் இல்லாததால் மகாராஷ்டிரா அரசு 5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.