470 எங்கே, 73,000 எங்கே? இந்தியாவின் அபார வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி சொன்ன விவரம்!

Update: 2022-07-29 13:15 GMT

தொழில்துறையாக இருந்தாலும், புதுமை கண்டுபிடிப்பாக இருந்தாலும், முதலீடாக இருந்தாலும் அல்லது சர்வதேச வர்த்தகமாக இருந்தாலும் இந்தியா தான் முன்னணியில் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நமது தொழில்துறை புத்தெழுச்சி பெற்றுள்ளது. உதாரணமாக, மின்னணு பொருட்கள் உற்பத்தியை குறிப்பிடலாம். கடந்த ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா இருந்தது. புதுமை கண்டுபிடிப்பு நமது வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக மாறியுள்ளது.

கடந்த ஆறே ஆண்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-ல் வெறும் 470 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 73,000 ஆக உயர்ந்துள்ளது! தொழில்துறையும் புதுமை கண்டுபிடிப்புகளும் சிறப்பாக செயல்பட்டால் முதலீடுகள் குவியும்.

கடந்த ஆண்டு இந்தியா சாதனை அளவாக 83 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை பெற்றுள்ளது. பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பெருமளவு நிதியைப் பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் நெருக்கடியான தருணத்தில் இருந்தபோது, நாம் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

மேற்கே ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கிழக்கே ஆஸ்திரேலியாவுடனும் அண்மையில் வர்த்தக ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்திட்டுள்ளோம். சர்வதேச விநியோக சங்கிலியில் வலுவான ஒரு இணைப்பாக இந்தியா மாறியுள்ளது.

Similar News